மு.மேத்தாவின் 'கண்ணீர் பூக்கள்' கவிதைத் தொகுப்பிலிருந்து ஒரு துளி.......
செருப்புடன் ஒரு பேட்டி
உங்கள் இனத்தைப்பற்றி நீயே ஏதேனும்
உரைக்க முடியுமா ?
உழைப்பதற் காகவே விலைக்கு வாங்கப்படும்
அடிமைகள் நாங்கள் ! மனிதரின்
பாதங்களுக்குப் பயண வாகனங்கள்
கடை வீதிகள் காட்டிக் கொடுக்கக்
காலணி ஆதிக்கத்தால் கைதுசெய்யப் படுகிறோம் !
உள்ளே ஒருவர்
இருக்கிறாரா இல்லையா என்று அறிவிக்கும்
பித்தளை போர்டுகள் பின்னால் வந்தவை
நாங்களோ
வெகுகாலமாக அந்த வேலையைச் செய்கிறோம் !
காலடியில் மிதிபட்டுக் காலமெல்லாம் உழைத்தாலும்
வாசலில் மட்டுமே வாசம் புரிகிறோம்...
உழைப்பதற் காகவே விலைக்கு வாங்கப்படும்
அடிமைகள் நாங்கள் !
காலில் மிதிபடுவதாய்க் கண்ணீர் விடுகிறிர்களே
உங்களை
கைகளில் தூக்கி நாங்கள் கௌரவப்படுத்துவதில்லையா ?
சில சமயங்களில்...
கைகளில் தூக்கிக் காப்பாற்றி வைப்பது
மீண்டும் எங்களை மிதிப்பதற்காகவே !
போகட்டும்...
ஒப்பற்ற உழைப்புக்கு உங்களைத் தானே
உவமானம் சொல்கிறோம்..
உவமானங்களால் மட்டுமே எங்கள்
அவமானங்கள் அழிந்து விடுவதில்லை
அதோடு
இழிவு படுத்தவும் எங்களைத் தானே
எடுத்துக் காட்டுகிறீர்கள்...
சரி..சரி..
குறைகளைப் பற்றி உங்கள் இனத்தவர்
கூடிப் பேசிடலாமே..
எவ்வித முன்னறிவிப்புமின்றி
எங்கள் கூட்டங்களைக்கூட நீங்களே
ஏற்பாடு செய்துவிட்டு
தீர்மானம் நிறைவேற்றுமுன்
திடீரென்று கலைத்துவிடுகிறீர்களே !
நீங்கள் கூட்டம் கூடும் போது
பார்வையாளர்கள் பங்குகொள்வ துண்டா ?
கோவில் வாசலில்..வைபவ நெரிசலில்..
நாங்கள் கூட்டம் போடும் போது
எங்களில் கன்னிமை கழியாத புதியவர்களை
சில கொள்ளைக்காரர்கள்
நோட்டம் போடுகிறார்கள்
தனியாக உங்களுக் கென்று
தத்துவப் பார்வை உண்டா ?
உண்டு.
சருகை மிதித்தால் சப்திக்கும் நாங்கள்
மலரை மிதிக்கும்போது மௌனம் சாதிக்கிறோம் !
வாங்கிய புதிதில் காலைக் கடிக்கும்
வழக்கம் எதற்காக ?
எங்களுக்கும் ரோஷம்
இருக்கிற தென்பதைக் காட்டிக் கொள்ளவே
ஆரம்பத்தில் கொஞ்சம் கடித்துப் பார்க்கிறோம்.
தொடர்ந்து போராடும் தோல்வலிமை யற்றதால்
பாதம் படப்படப் பணிந்து விடுகிறோம் !
திடீரென அறுந்துபோய் நடுவீதியில் எங்களைத்
திண்டாட வைப்பது ஏன் ?
நாங்கள்
ஒத்துழையாமை இயக்கம் தொடங்கும் போதுதான்
தெருவோரத் தொழிலாளியின்
வயிற்றுப் பாட்டுக்கு வழிபிறக்கிறது !
பழசாகிப் போனதெனும் காரணம் காட்டி
உங்களை நாங்கள் ஒதுக்கிவிடும் போது...
உங்களால் ஒதுக்கப்பட்டவர்
எங்களை
உபயோகித்துக்கொள்வர் !
இனிய நினைவுகள் வாழ்வில் ஏதேனும்...
நாணத்தில் கவிழும் தாமரைக் கண்கள்
உங்களைச் சந்திக்கும் முன்பாக
எங்களைத்தான் சந்திக்கின்றன !
தீவிரமாக எதைப்பற்றியாவது நீங்கள்
சிந்திப்பதுண்டா ?
உண்டு.
சில தேசங்களையும்
சில ஆட்சிகளையும்
பார்க்கும்போது
மீண்டும் நாங்களே
சிம்மாசனம்
ஏறிவிடலாமா
என்று
யோசிப்பதுண்டு !